மாணவர்கள் என்றும் மறக்க முடியாத ஒரு நாள். அப்படி
என்ன இருக்கிறது அந்த நாளில் என்று தானே கேட்கிறீர்கள். புரிகிறது. அது ஒருவரின்
பிறந்தநாள்..ஏன் அவரின் பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக உள்ளது என்பதனை
அறிய இந்த காணொளியை முழுமையாக காணுங்கள்.
சிறு வயதில் அவரின் கேள்விக்கும் திறனைப் பாருங்கள்..
விநாயகர் சதுர்த்தி நாளில் அவர் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும்
அவல்,பொறி,கடலை,பழம் ஆகிய கலந்த பிரசாத கலவையை மாணவர்களுக்கு கொடுத்துக்
கொண்டு இருந்தார். அதை வாங்க மாணவர்கள் முட்டி தள்ளிக் கொண்டு இருந்தனர். ஆனால்
ஒரு சிறுவன் மட்டும் அந்தக் கூட்டத்தில் ஒதுங்கி நின்று இறுதியாக வாங்கிக் கொள்ளலாம்
என கடைசியாக துண்டு கொண்டுப் போய் ஆசிரியரிடம் வாங்கினான்.ஆனால்
அச்சிறுவனுக்கு சிறிதளவே கிடைத்தது.
நேரே அவன் வீட்டுக்கு சென்றான்.அவன் தாய் அந்த துண்டை
வாங்கிப் பார்த்தாள் அவன் வாங்கி வந்த பிரசாதத்தில் பழம்,கடலை,இவையெல்லாம்
இல்லாமல் குறைந்த அளவே இருந்தது. இதைக்
கண்ட அவன் தாய் என்ன இராசா பிரசாதம் குறைவா வாங்கிட்டு வந்து இருக்க... அதற்கு
அந்த சிறுவன் வாத்தியார் அவ்வளவு தான் கொடுத்தங்கம்மா என்றான். அந்த
தாய் நீ கடைசியா போனியாக்கும் என கூறினார். அச்சிறுவன்
இது என்னம்மா நியாயம் எல்லாரையும் போல நானும் தான் காசுக் கொடுத்து இருக்கேன் எல்லோருக்கும்
கொடுப்பது போல தானே எனக்கும் கொடுக்கனும்.இது அவரு
தப்பில்லையா? என வெடுக்கென கேட்டான். இவ்வாறு
எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என சிறு வயதிலேயே அந்த அறிவு திறன் பெற்றிருந்தான்.அவர்
தான் பின் நாளில் அனைத்து தலைவர்களும் போற்றும் ஒரு உன்னத தலைவராக உருவானார் அவர் தான்
பெருந்தலைவர் காமராஜர்.
பிறப்பு:
விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு
ஜீலை – 15 ஆம் நாள்
குமாரசாமி – சிவகாமியம்மாள் தம்பதியருக்கு மூத்தப் பிள்ளையாக காமராஜர் பிறந்தார். இவருடைய
தங்கையின் பெயர் நாகம்மாள். தனது தந்தை வழி பாட்டி பார்வதி அம்மாள் தன் குலதெய்வப் பெயராக
காமாட்சி என்ற பெயரைச் சூட்ட,அன்னை சிவகாமியோ ராஜா என செல்லப் பெயரிட்டு அழைக்க, தந்தை
குமாரசாமியோ தெய்வப் பெயரையும்,செல்லப்பெயரையும் சேர்த்து காமராஜ் என பெயரிட்டார். பின்
அந்த பெயரே பின்னர் நிலைத்தது.
பள்ளிப் படிப்பு:
தனது ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பித்த காமராஜர் அதன் பின்
ஏனாதி நாயனார் வித்யாசாலையில் சேர்ந்தார். பிடி
அரிசி பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிக்கு ஆசிரியர்களுக்கு சம்பளமில்லை. ஓராண்டுக்குப்பின்
ஏனாதி நாயனார் பள்ளியிலிருந்து சத்திரிய
வித்யாசாலா என்ற பள்ளியில் சேர்ந்தார். வசதி படைத்தவர்களிடமிருந்து
நிதியுதவி பெற்று நாடார் சமூகத்தாரால் நடத்தப்பட்ட அப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவசக்
கல்வி அளிக்கப்பட்டு வந்தது. அப்போது இருந்து வந்த இந்த நடைமுறைகள் தான் பின்னாளில் இலவசக்கல்வி,பகல்
உணவுத் திட்டம் போன்றவற்றை காமராஜர் செயல்படுத்த உந்துதலாக அமைந்தது.ஆனால்
இவருடைய கல்வி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தந்தை மரணத்தால் தடைப்பட்டது. இவர்
கல்வியின் மகத்துவம் புரிந்ததால் தான் முதலமைச்சர் ஆனப் பிறகு மாணவர்களின் கல்விக்காக
இவர் பல செய்த செயல்பாடுகள் எல்லோராலும் போற்றும்படியாகவும் இருந்தது. கல்விக்காக
இவர் மேற்கொண்ட முயற்சிகளால் தான் இவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக
மாணவர்கள் என்றும் மறக்க முடியாத நாளாக உள்ளது.
கல்விக் கண்திறந்த கடவுள் :
ஒரு முறை காமராஜரை சந்தித்து நமது ஆட்சியின் சாதனைகளை விளக்கி ஒரு விளம்பரப்
படம் எடுக்க வேண்டும் என்றும் அதைத் தமிழகத்தில் உள்ள எல்லாத் திரையரங்குகளிலும் திரையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கட்சிக்காரர் கேட்டார்.
அதற்கு எவ்வளவு செலவாகும்? என்றார் காமராஜர். சுமார்
மூன்று இலட்சம் வரை செல்வாகும் என்றார் கட்சிக்காரர். இதைக்
கேட்ட காமராஜர் ‘ ஏ ! அப்பா! மூணு இலட்சமா? அது இருந்தா மூணு பள்ளிக்
கூடத்தை திறந்து விடுவேனே!விளம்பரமும் வேண்டாம்.படமும்
வேண்டாம். என சொல்லி அனுப்பிவிட்டார்.
வருமானம்,சாதி,பேதம் இன்றி அனைத்து குழந்தைகளும் பாகுபாடு இன்றி அனைத்து
குழந்தைகளுக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி கற்க வரும்
எந்தக் குழந்தையும் ஒரு மைல் தொலைக்குமேல் நடக்கக் கூடாது அதற்கேற்ப பள்ளிகளைத் திறக்க
வேண்டும். அது போல நடுநிலைப் பள்ளிகள் மூன்று மைல் தூரத்துக்கு ஒன்று
என்ற வீதத்திலும், இரண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையே உள்ள தூரம் ஐந்து மைல்
என்ற அளவிலும் இருக்க வேண்டும் என முடிவு செய்து, 300 மக்கள்
வாழும் ஊரில் தொடக்கப்பள்ளி,
2000 மக்கள் வாழும் ஊரில் நடுநிலைப்பள்ளி,5000 மக்கள்
வாழும் சிறிய நகரங்களில் உயர்நிலைப் பள்ளி என்று திட்டமிட்டு பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டன. ஆண்டொன்றுக்கு 1735 வகுப்புகள்
தொடங்க வேண்டும் என்ற லட்சியப்படி
1956 முதல் 1959 வரையிலான
மூன்றாண்டுகளில் 6068 புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை பெருக்குவதற்காக உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பைப்
பெறும் வகையில் மாநிலம் முழுவதும் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. அதன்
முதல் மாநாடு 1958 பிப்ரவரி 20 அன்று கடம்பத்தூரில் நடைபெற்றது. 1958ல் தொடங்கி
1963 வரை நடத்தப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட இத்தகைய மாநாடுகளின்
மூலம் 6.47 கோடி ரூபாய் வரை பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்டு அவை
பள்ளிச் சீரமைப்பு,சிறுவர் சிறுமியருக்கு இலவச உணவு மற்றும் சீருடை ஆகியவற்றிருக்கு
பயன்ப்படுத்தப்பட்டன.
மதிய உணவுத்திட்டத்திற்கான நிகழ்வு:
காமராஜர் ஒரு முறை கிராமங்கள் வழியே சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்த போது
அங்கு சில சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதை கண்டார். உடனே
வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி அங்கிருந்த சிறுவனை அழைத்து ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை? எனக்
கேட்டார். பள்ளிக்கூடம் போனா யாரு சோறு போடுவா? என அந்த
சிறுவன் திருப்பிக் கேட்டான். அப்ப சோறு போட்டா போவியா? என காமராஜர்
கேட்டதும், போவேன் என்றான். அப்போது
காமராஜருக்கு மனதில் உதித்தது தான்
இந்த பகல் உணவு திட்டம். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அப்போது ஏழைக் குழந்தைகளுக்கு
மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. அதை மாநிலம் முழுவதும் விரிவுப் படுத்த வேண்டும் என முடிவு
செய்தார். முதல் கட்டமாக 1957ல் நவம்பர் முதல் தேதியிலிருந்து
பகல் உணவு திட்டம் அரசு நிதி உதவியோடு அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம்
பாரதி பிறந்த எட்டையபுரம் மண்ணில் தொடங்கி வைத்த பேசிய காமராஜர் பள்ளிக் கூடங்களில்
ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதை முக்கியமாகக் கருதுகிறேன்,அதற்காக
என் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் ஊராகப் போய் பிச்சை எடுக்கவும் தயாராக
இருக்கிறேன் என உணர்ச்சிகரமாக பேசினார்.இதை கேட்ட மக்கள் நீங்கள்
ஏன் பிச்சை எடுக்க வேண்டும்? நாங்கள் உதவி செய்கிறோம் என முழங்கினர்.
வசதி படைத்தவர்கள் பணமாகவும்,விவசாயிகள் விளைபொருட்களாகவும்
உதவிகள் வழங்க முதல் கட்டமாக
4200 பள்ளிகளில் 1,20,000 மாணவர்களுக்குப்
பகல் உணவு வழங்கப்பட்டது. அது பின்னர் மாநிலம் முழுமைக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. பள்ளிக்குழந்தைகளுக்குப்
பகல் உணவு அளிக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமை என்று நேரு
பாராட்டினார்.
கல்வி வளர்ச்சி என்பது ஒரு குறுகிய வட்டமல்ல என்பதனை உணர்ந்திருந்த படிக்காத
மேதையின் ஆட்சிகாலத்தில்தான் பத்து பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இது தவிர
மருத்துவக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, திரைப்படக்கல்லூரி,கால்நடை
மருத்துவக் கல்லூரி,ஐடிஐ என்றழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவையும்
உருவாக்கப்பட்டன.
காமராஜரும் தமிழ் பற்றும்
தமிழைத் தன் மூச்சாக கொண்டு அதன் வளர்ச்சிக்கென பல்வேறு பாதைகளை
வகுத்தவர் காமராஜர் தான்.தமிழின் பல்வேறு வளர்ச்சி நிலைக்கான வித்து அவருடைய ஆட்சியில்
தான் ஊன்றப்பட்டது. சான்றாக
1956ல் சட்டசபையின் சார்பாக, தமிழ்
மக்களின் சார்பாக தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதவைத் தமிழன்னையின் மடியில் சமர்ப்ப்பிக்கிறேன்
என பெருமையுடன் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அறிமுகம்
செய்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து அது வரையிலும்
ஆங்கிலத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டு வந்த வரவு – செலவு
அறிக்கை முதன்முறையாக காமராஜர் ஆட்சியில் 1957 – 1958ல் தமிழில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய மொழிகளிலேயே முதல் முறையாக காமராஜர் ஆட்சியில் தான் தமிழ்மொழியில் கலைக்களஞ்சியம்
உருவாக்கப்பட்டது.
பத்தாவது பாடப்புத்தகத்தில் திருக்குறள் இடம்பெறுவது கட்டாயமில்லை என்ற நிலையை
மாற்றி கட்டாயம் இடம் பெறச் செய்தார்.
பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் திறமையைத் தமிழுக்குப் பயன்படுத்திக் கொள்ள
ஏதுவாக அவரை சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியராக்கினார்.
மறைந்த பெருந்தலைவர் :
காந்தியடிகளை மிகவும் நேசித்த காமராஜர் 1975 ஆம் ஆண்டு
அவர் பிறந்த தினமான அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் மதியம் 3.20 மணிக்கு மறைந்த செய்தி
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காமராஜரும் விருதும்
1976ல் மத்திய
அரசு காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்ததோடு அஞ்சல் தலையும் வெளியிட்டு
சிறப்பு செய்தது.
1977ல் தமிழக சட்டபேரவையில் குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி
காமராஜரின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
1984ல் காமராஜர் பிறந்த நாளில் அவர் பெயரால் விருதுநகரைக் கொண்டு
காமராஜர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2004ல் இந்திய அரசு ஐந்து மற்றும் நூறு ரூபாய் நாணயங்களில்
காமராஜரின் படத்தை வெளியிட்டு பெருமைச் சேர்த்தது.
2004ம் ஆண்டு காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம்
வெளியானது. ஆங்கிலப் பதிப்பின் குறுந்தகடு 2007
ஆம் ஆண்டு வெளியானது.
2006ல் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு ஆணை பிறப்பித்தது.
காமராஜர் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என விரும்பினார். அதற்காக அவர் எந்த செயலையும் துணிந்து செய்தார். இப்படிப்பட்ட தலைவனின் எண்ணத்தை நிறைவேற்றுவது நம் அனைவரின் கடமையாகவும். ஜூலை 15 ஒரு நாள் மட்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினால் மட்டும் போதாது ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோமாக......
நன்றி, வணக்கம்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது