ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)
இலக்கண வினா – விடைகள்
இயல் – 7
புறப்பொருள் இலக்கணம்
1. புறத்திணை என்றால் என்ன?
புறம் பற்றிய செய்திகளைக் கூறுவது புறத் திணை. இது பன்னிரண்டு வகைப்படும்.
2. புறத் திணையின் வகைகள் யாவை?
1. வெட்சி
2. கரந்தை
3. வஞ்சி
4. காஞ்சி
5. நொச்சி
6. உழிஞை
7. தும்பை
8. வாகை
9. பாடாண்
10. கைக்கிளை
11. பெருந்திணை
12. பொதுவியல்
3. ஆநிரைகள் பற்றிய திணைகளை விளக்குக:-
ஆநிரைகளை பற்றிய திணைகள் : வெட்சி , கரந்தை
வெட்சி
ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளை கவர்தல் வழக்கமாக இருந்தது.
இவர்கள் வெட்சிப் பூவினைச் சூடிக் கொண்டு செல்வர்.
வெட்சிப் பூ இட்லிப்பூ என அழைக்கப்படுக்கிறது.
கரந்தை
கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் செல்வது.
கரந்தைப் பூவினைச் சூடிச் செல்வர்.
கொட்டைக் கரந்தை என்றும் கூறுவர்.
4. வஞ்சித் திணை, காஞ்சித் திணை விளக்குக:- ( போர் பற்றியத் திணைகள் )
வஞ்சித் திணை
,மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டை கைப் பற்றச் செல்வது.
வஞ்சிப்பூவினைச் சூடிச் செல்வர்.
காஞ்சித் திணை
நாட்டை கைப் பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல்.
காஞ்சிப்பூவினைச் சூடிச் செல்வர். காஞ்சி ஒரு சிறு மரம்.
5. கோட்டைப்( மதில் ) பற்றிய திணைகள் யாவை?
கோட்டைப் பற்றிய திணைகள் : நொச்சித் திணை, உழிஞைத் திணை
நொச்சித் திணை,
கோட்டையைக் காத்தல் வேண்டி முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடல்.
நொச்சிப்பூவினைச் சூடி இருப்பர்.
மருத நிலத்திற்குரியது நொச்சி.
உழிஞைத் திணை
மாற்றரசனின் கோட்டையை கைப்பற்ற போரிடல்.
உழிஞைப் பூ சூடி இருப்பர்.
உழிஞைக் கொடியை முடக்கத்தான் எனக் கூறுகின்றனர்.
6. தும்பைத் திணை , வாகைத் திணை – விளக்குக:-
தும்பைத் திணை
பகைவேந்தர் தம் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட போர் வீர்ர்களுடன் போர்களத்தில் வெற்றிக்காக போரிடுவது.
தும்பைப்பூவினைச் சூடி இருப்பர்.
தூய வெண்ணிற மலர்களை கொண்ட்து தும்பை.
வாகைத் திணை
போரிலே வெற்றிப் பெற்ற மன்னன் மகிழ்வது.
( வாகை – வெற்றி )
வாகைப்பூவினைச் சூடி இருப்பர்.
மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்டது வாகை.
7. பாடாண் திணையை விளக்குக:-
பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி,வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றி பாடுவது பாடாண் திணை. ( பாடு + ஆண் + திணை = பாடாண் திணை )
8. பொதுவியல் திணையை விளக்குக:-
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை.
9. கைகிளை மற்றும் பெருந்திணையை விளக்குக:-
கைக்கிளை : ஒரு தலைக் காமம்.
பெருந்திணை : பொருந்தாக் காமம்.
10. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக:-
வெட்சி – கரந்தை
நொச்சி – உழிஞை
தும்பை – வாகை
வஞ்சி – காஞ்சி
கைக்கிளை – பெருந்திணை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது